அரசியலில் தொடர்ந்து பயணித்தாலும், பல மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலும், தொடர்ந்து எடுக்கும் தவறான அரசியல் முடிவுகளால், தனக்கான வாய்ப்புகளை தானே கெடுத்துக் கொண்டவர்தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இத்தேர்தலில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கும் 6 சீட்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சிக்கு, வெறும் 4 இடங்கள் மட்டுமே தருவதற்கு திமுக பேசி வருவதாகவும், அதனால்தான் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணியை அமைத்து, அதில் விஜயகாந்தையும் இணைப்பதற்கு பெரிதும் மெனக்கெட்ட வைகோ, இறுதியில் தனது முயற்சியில் வெற்றிகண்டு, திமுக தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஸ்டாலின் எந்தவகையிலும் முதல்வராகிவிடக்கூடாது என்று உறுதியாக செயல்பட்டார் என்பதாக அந்நேரத்தில் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போது, திமுகவின் மனதில் அந்த நினைப்பது வந்துபோகிறதா? என்று தெரியவில்லை. எனவேதான், விசிக மற்றும் இகம்யூனிஸ்ட் போன்று, மதிமுகவுக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே தருவதற்கு, திமுக தயாராக இருப்பதாய் செய்திகள் வருகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே, மதிமுக விஷயத்தில் திமுக தனது கணக்கை ஓரளவு சரிசெய்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், கணக்கு இன்னும் டேலி ஆகவில்லையோ? என்று நினைக்கும் வகையில் தற்போதும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
இதனால், பேச்சுவார்த்தை இழுப்பதாக கூறப்படுகிறது. இன்று தொடர்ந்து பேச்சு நடக்கும்பட்சத்தில், இறுதியாக அக்கட்சிக்கு 5 அல்லது 6 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.