சென்னை: சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டால், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்களது கொள்கை என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல்கட்சிகள் கூட்டணி தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலிலும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலைப்போல 4 அணிகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி திமுக, அதிமுக மட்டுமின்றி, சசிகலா தலைமையிலான அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என 4 கூட்டணிகள் உருவாகும் என எதிர்பார்ப்பு ஏற்படுடள்ளது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல் கூட்டணி முடிவானதும் தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து அமமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.
அமமுக சார்பில் மார்ச் 3 முதல் 10ஆம் தேதிவரை விருப்ப மனுக்கள் பெறப்படும். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் எங்களுடைய தொண்டர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வார்கள்.
இதையடுத்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். அப்போது, அமமுகவுடன் அதிமுக, பாஜக கூட்டணி வைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தெரிவித்த டிடிவி, யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக மற்றும் பாஜகவை கூட்டணியில் சேர்க்க தயார். அந்த கட்சிகள் வரும் என எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் தொடர்ந்து கேட்பதால் அப்படி பதிலளித்தேன். அவர்களாக கூட்டணி பேச வந்தால் பேசுவோம் என்றார்.
அதிமுக, பாஜக, அமமுக போன்ற கட்சிகள் இணைந்தால் திமுகவை வீழ்த்தலாம் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, எங்களுடைய அம்பும் இலக்கும் ஒன்றுதான் என்றவர், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் பிரதான நோக்கம், அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறுஅவர் கூறினார்.