சென்னை: முதியோருக்கான தபால் வாக்குகளில் முறைகேடு செய்ய அதிமுக, பாஜக முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அனுமதி என்பது எல்லா வகைகளிலும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. அதில் எந்தவித தெளிவும் இல்லாத நிலை உள்ளது.
இந்த தபால் வாக்குகளை பயன்படுத்தி பீகாரில் ஆட்சியை அவர்கள் பிடித்தனர். தபால் வாக்குகளில் தான் எல்லா தவறுகளையும் செய்வதற்கான வழிகள் உள்ளன. எனவே, தபால் வாக்கு முறையை நீக்க வேண்டும். இது தொடர்பான திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளோம்.
அதே போல நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் தேர்தல் தேதி வெளியாகும் சில மணி நேரங்கள் முன்பாக வெளியிடப்பட்டு உள்ளன. அந்த திட்டங்களுக்கு எல்லாம் தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஆளுநர் கையெழுத்திட்டு உள்ளார். இது அரசியல் சட்டத்தில் ஒரு மோசடி.
இதை எல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று மாவட்டத்தின் ஒரே இடத்தில் வாக்குகள் எண்ணப்படும் என்பதை கைவிட்டு அந்தந்த தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.