நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மறைந்த குமரி மாவட்ட எம்.பி. எச். வசந்தகுமார் அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3நாள் பயணமாக தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 3வது நாளான இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி வந்த ராகுல்காந்திக்கு பிரமாண்டமான முறையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை வரவேற்ற ராகுல், மக்களிடையே பேசும்போது, “உங்கள் சிறப்பான வரவேற்புக்கு நன்றி என்று தெரிவித்தார்.
பின்னர் கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதிக்கு வந்தார். அங்கு அவரை காண ஏராளமான மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் கூடி நின்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அதையடுத்து அகஸ்தீஸ்வரம் பகுதிக்கு சென்றவர், மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, வசந்தகுமாரின் சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கினார். அதையடுத்து வசந்தகுமாரின் மனைவி மற்றும், வசந்த குமாரின் மகனும், மாநில காங்கிரஸ் பொது செயலாளருமான விஜய் வசந்திற்கும் ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் மக்களிடையே உரையாற்றிய ராகுல் இன்று நம் தலைவர் வசந்தகுமாரை பற்றி நினைவு கூர்கிறோம். எதற்காக என்றால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், மற்ற அரசு அவரை மிரட்டினாலும் அஞ்சாமல் அவர் காங்கிரஸ் பின்னால் உறுதியாக நின்றதால் அவரை நினைவுகூர்கிறோம். அவர் எப்போதுமே பின்தங்கிய மக்களுக்காக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விளிம்புநிலை மக்களுக்கான உழைத்துக்கொண்டிருந்தார். ஏழை குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்தார். ஒரு குடும்பத்திற்கு திருமணம் செய்ய நிதி உதவியாக 10,000 ரூபாய் வீதம் 1,000 குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
விதவைகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். பல்வேறு நீர் நிலைகளை சீரமைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உணவு அளித்தவர். அவரை போன்ற வலிமை வாய்ந்த, திறமை வாய்ந்த, சக்தி படைத்த மனிதரை இழந்திருக்கிறோம் என நினைவு கூர்ந்தவர், நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன்.
அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றார். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என கூறினேன் என்றவர், தமிழ் மொழி, கலாசாரம் பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். அனைத்து மொழி, கலாசாரம், மதங்களை காக்க நான் கண்டிப்பாக துணை நிற்பேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.