டில்லி
இந்தியாவில் கிரிப்டோ கரன்சியால் பொருளாதார பாதிப்பு ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் தெரிவித்துள்ளது.
கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிடல் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில உலக அளவில் கடந்த வருடம் பிட் காயின் மதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று கிரிப்டோ கரன்சியின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக $50,000 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இது நீர்க்குமிழி போன்றது எனவும் விரைவில் உடையும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பொருளாதார பாதிப்பு அதிகம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “இந்த கிரிப்டோ கரன்சியால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். பிரதமர் மோடியின் நிர்வாகம் அனைத்து கிரிப்டோ கரன்சிகளுக்கும் நாட்டில் தடை விதித்து அரசே டிஜிடல் பணத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் முன்பு ரிசர்வ் வங்கி இந்த மின்னணு பணம் மூலம் பண மோசடி மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி அளிப்பது போன்றவை அதிகரிக்கலாம் என கூறி இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிப்டோ கரன்சியால் மோசடி நடந்ததால் ரிசர்வ் வங்கி அவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
தற்போது அரசின் டிஜிடல் பணம் வெளியாக உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்ததின் மூலம் ரிசர்வ் வங்கியும் இந்த பண விளையாட்டில் இறங்க உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பண அறிமுகத்துக்கு முன்பு இதில் உள்ள பல சட்ட ஓட்டைகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது பிட் காயினுக்கு உலக செல்வந்தர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவன தலைமை அதிகாரியுமான எலோன் மஸ்க் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.,