கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். இவர், வங்காள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர்.
இதுதொடர்பாக திவாரி இன்று (புதன்கிழமை) காலை டிவிட்டரில் அறிவித்திருந்தார். கட்சி நடவடிக்கைகளுக்காக தனது புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கியதுடன், அதை பகிர்ந்து கொண்டதுடன், அதில், “ஒரு புதிய பயணம் இன்று முதல் தொடங்குகிறது. உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. இனிமேல் இது இன்ஸ்டாகிராமில் எனது அரசியல் சுயவிவரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
திவாரி ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) மற்றும் டி 20 வடிவங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான டி.எம்.சியின் பிரச்சாரத்தைக் கையாளும் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையாக, திவாரி, மம்தா பானர்ஜி இடையே சந்திப்பு நடைபெற்றதாகவும், வர இருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் மனோஜ் திவாரி களமிறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.