கொல்லம்: கேரளாவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, கொல்லம் கடலில் மீனவர்களுடன் கடலுக்குள் சென்றார்.

கேரளாவிலும் இன்னும் ஓரிரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரும் வகையில் ராகுல்காந்தி அங்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள்ளார். அதன் ஒருபகுதியாக  தனது வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மேலும், காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு ஏற்பாடு செய்த டிராக்டர் பேரணியிலும் பங்கேற்றார். திருக்கைப்பேட்டையில் இருந்து மூட்டில் வரை 9 கிலோமீட்டர் தொலைவுக்கு அவர் டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய ராகுல்,  மத்திய அரசாங்கத்தால் விவசாயிகளின் வலியை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், மோடி அரசு கொண்டுவந்துள்ள  3 விவசாய சட்டங்களும்  இந்தியாவில் விவசாய முறையை அழிக்கவும், முழு வணிகத்தையும்  நரேந்திர மோடியின் 2-3 நண்பர்களுக்கு வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இன்று  கொல்லம் பகுதியில் பிரசாரம் செய்த நிலையில்,  தங்கசேரி கடற்கரை பகுதியில் மீனவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து அங்குள்ள மீனவர்களுடன்  சேர்ந்து கடலுக்குள் சென்று  மீன்பிடிப்பதை கண்டறிந்தார். மீனவர்களுடன் சேர்ந்து வலையை கடலுக்குள் வீசியும், வலையை இழுத்தும் அவர்களின் தொழிலை புரிந்துகொண்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல், மீனவர்களின்  வேலையை நான் புரிந்துகொண்டு பாராட்டுகிறேன். வெற்று வலையை வீசி, அதில் மீன்க்ள சிக்காமல் வெளியே இழுக்கும் ஏமாற்றத்தையும் பார்த்தேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.