சென்னை: 44வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்தில் இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சி மார்ச் 9ந்தேதி வரை நடைபெற உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 44-ஆவது ‘சென்னை புத்தகக் காட்சி’ நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது. சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கிறாா்.
இந்த புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் காலை 11 முதல் மாலை 8 மணி வரை வாசகா்கள் அனுமதிக்கப்படுவா்.
இந்த புத்தகக் கண்காட்சியை காண பள்ளி மாணவா்களுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படும். கூட்டத்தைதவிர்க்க இணைய வழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தக்கண்காட்சியில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும். வாசிப்பை வளா்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
உலக அறிவியல் தினம் (பிப்.28), மகளிா் தினம் (மாா்ச் 8) ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.நடப்பாண்டு ‘ரேக்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
புத்தக்கண்காட்சியில் சிறிய எழுத்தாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்தலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக்கண்காட்சி . வரும் மாா்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.