ராமேஸ்வரம்

கம விதிகளை மீறி ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் நுழைய முயன்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை குருக்கள் தடுத்தது பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஆகம விதிப்படி வெகு காலமாக ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சாமி கோவிலில் கருவறைக்குள் நுழைந்து சாமிக்குப் பூஜை செய்யும் உரிமை சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த குருக்களுக்கு மட்டுமே உண்டு.   இவர்களைத் தவிர சிருங்கேரி சங்கராச்சாரியார் மற்றும் நேபாள மன்னர் ஆகியோருக்கு மட்டுமே கருவறைக்குள் நுழைய அனுமதி உண்டு,

நேற்று காலை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ராமேஸ்வர கோவிலுக்கு வந்துள்ளார்.  அதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பி மூலஸ்தானத்தில் பூஜை செய்ய அனுமதி பெறப்பட்டிருந்தது.   நேற்று காலை கோவிலுக்கு வந்த விஜயேந்திரர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.   அதன் பிறகு அவர் கோவில் கருவறைக்யில்  அபிஷேகம் செய்யச் சென்றார்.

விஜயேந்திரர் தன்னுடன் பூஜை பொருட்கள், தங்கக் காசு மாலை, வெள்ளி பொருட்களுடன் அர்த்த மண்டபத்துக்குச் சென்றுள்ளார்.   அப்போது அவரை குருக்கள்கள் தடுத்துள்ளனர்.  அவரை கும்பிட்டபடி ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளே நுழைய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.   ஆயினும் ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக தலைவர் எச் ராஜா ஆகியோருடைய ஆதரவுடன் அவர் உள்ளே நுழைய முயன்றதாகவும் குருக்கள்கள் வழி மறித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு வந்திருந்த அமைச்சர் ஒ எஸ் மணியன், தக்கார் குமரன் சேதுபதி உள்ளிட்டோர் குருக்களைச் சமாதானம் செய்து விஜயேந்திரரை கருவறைக்குள் அனுமதிக்க வைத்துள்ளனர்.  விஜயேந்திரர் பூஜை நடத்தி வழிபடும் போது குருக்கள் திரைச்சீலையை கொண்டு அதை யாரும் பார்க்க முடியாமல் மறைத்துள்ளனர்.   அதன் பிறகு கருவறையில் இருந்து வெளியே வந்து விஜயேந்திரர் மூலவருக்குத் தீபாராதனை செய்துள்ளார்.

இந்த நிகழ்வால் கோவில் மூலஸ்தானப்பகுதியில் கடும் பரபரப்பும் பதற்றமும் நிலவி உள்ளது.   ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தார்.  அப்போது அவர் மீது சங்கரராமன் கொலை வழக்குப் பதியப்பட்டிருந்தது.   அந்த நேரத்தில் அவர் கோவில் கருவறைக்குள் நுழைய முயன்ற போது அப்போது பணியில் இருந்த குருக்கள் அவரை தடுத்து நிறுத்தியது. குறிப்பிடத்தக்கதாகும்.