டெல்லி: மதுரையில் அமைய உள்ள  எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்த ராவை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது.

மதுரையை அடுத்த  திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூபாய் 1264 கோடி  திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம்ஆண்டு அறிவிக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை  எந்தவொரு பணியும் தொடங்கப்படாத நிலையில், அதன் திட்ட மதிப்பீடு, 2ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில்,    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் மற்றும் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை எய்ம்சின்  தலைவராக புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமனம்  செய்யப்பட்டார். பின்னர் ஐ.ஐ.டி-மெட்ராஸ் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்பட   15 பேர் அறிவிக்கப்பட்டனர். 2 இடங்கள் காலியாக உள்ளது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்தராவ் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் அமைய உருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை  நியமனம் செய்து அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

மேலும்,  இதே போல் ஜம்மு காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின்  செயல் இயக்குனராக சக்தி குமார் குப்தா என்பவரும் , குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநராக தேவ் சிங் கடோச், இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குராக விர் சிங் நேகி  ஆகியோர்களை  நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.