மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாதொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிர, கேரளா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், சோதனைகளை அதிகப்படுத்தவும் மத்தியஅரசு மாநில அரசை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிராக மாநில முதல்வர் பொது மக்களிடம் உரையாற்றினார். அப்போது, தொற்று பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் தீர்வாக இருக்க முடியாது. ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே வழியாக உள்ளது. சில நாட்களுக்கு அரசியல் போராட்டம் மற்றும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படு வதாக தெரிவித்தவர், முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, முகக் கவசம் அணியாதவர் களுக்கான அபராதத் தொகை ரூபாய் 200 லிருந்து ரூபாய் ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கருணையே காட்டாமல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹார் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் போன்ற சடங்குகளிலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மணப்பெண் , மாப்பிள்ளை மீதும் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.