சென்னை: புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவே தமிழிசை. மாநில பொறுப்பு ஆளுநகராக மோடி அரசால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி, 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, ஆளுநரிடம் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ”பாரதிய ஜனதா கட்சி, புதுச்சேரியின் மக்கள் அரசாங்கத்தைக் கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட விடாமல் தடுத்து வந்தது. அதற்குக் கிரண்பேடியைப் பயன்படுத்தினார்கள்.

தற்போது அந்த அரசையே நீக்குவதற்குத் தமிழிசையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதைத் தவிர அதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை. இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் புறம்பான மிகத் தவறான செயல். மக்களால் மன்னிக்க முடியாத தவறை மோடி அரசு செய்துள்ளது. ஆளுநர் தமிழிசையின் செயலால், அங்கு காங்கிரஸ் இன்னும் வலுவடையும். மாபெரும் இயக்கமாக மாறும். மீண்டும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அதுதான் அங்கு நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.