சென்னை: திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என கூறி பணம் வசூலித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, 234 தொகுதிகளுக்கும் விரும்பமனு என்ற பெயரில் கல்லாக்கட்டி வருவது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், திமுக சார்பில், பிப்ரவரி 17 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த 15-ம் தேதி அறிவித்திருந்தார். அதனப்டி, ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ரூ.25 ஆயிரம் கட்டணத்துடன் விருப்ப மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல் நாளிலேயே 1,000-க்கும் அதிகமான திமுகவினர் ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
இந்த நிலையில், விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடைபெறவிருக்கும் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-2-2021 புதன்கிழமை முதல் 24-2-2021 புதன்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுமென ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக தலைவரிடம் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கிணங்க 28-2-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
தமிழ்நாடு – புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்:
பொதுத் தொகுதி – ரூ.25 ஆயிரம்
மகளிருக்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் – ரூ.15 ஆயிரம்
குறிப்பு: வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணிக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.
விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.