சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும் 25ந்தேதி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தமிழ்நாடு தலைமைச் தேர்தல் ஆணையாளர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில், சட்டப் பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் தமிழ்நாடு வந்திருந்த தலைமைத் தேர்தல் ஆணையர், நிர்வாக, பாதுகாப்பு ஏற்பாடுகளின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கட்சிப் பிரதிநிதிகள், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு வருகின்றனர். மேலும் தேர்தல் நெருங்க இன்னும் அதிகப்படியான துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது”.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.