சென்னை: சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு, கேஸ் நிறுவனங்கள் தனியாக பணம் வசூலித்து வருகின்றன. குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் முதல், மாடிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு மேலும் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்கக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக புகார் கூறி வருகின்றனர். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி ஏமாற்றி வருகிறது.
இது தொடர்பாக லோகரங்கன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி, செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கவோ, சிறிது நேரம் உட்காரவோ யாரும் அனுமதிப்பதில்லை, என்று தெரிவித்ததுடன், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜராக வழக்கறிஞர், இதுபோன்ற புகார்கள் அளிக்கும் வகையில், ஏற்கனவே நடைமுறை உள்ளது என்றும், அதில் கூறப்படும் புகார்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். அதை பதிவுசெய்து கொண்ட தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் வழக்கை முடித்தனர்.