டில்லி
பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் குழுவின் தலைவர் ஜுவல் ஓரம் மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று நடந்துள்ளது. இதில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு இந்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அதற்கான செலவினங்கள் குறித்தும் அறிக்கை அளித்தனர். மத்திய பாதுகாப்புத் துறை தலைவர், ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர், பாதுகாப்பு செயலர் மற்றும் அதிகாரிகள் அறிக்கைகளை அளித்தனர்.
இந்த அறிக்கைகள் குறித்த விவாதங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல விளக்கங்களை கோரினார். அவர் ரஃபேல் விமானம் குறித்த கேள்வியில் தொழில்நுட்ப மாற்றங்கள் நடத்த வேண்டி இருக்கையில் இவை ஏன் நேரடி கொள்முதல் செய்யப்பட்டன எனவிளக்கம் கேட்டார். அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் இதன் மூலம் விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி கிடைக்கும் என பதில் அளித்தனர். மேலும் எதிர்காலத்தில் நாமே இந்த விமானங்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
அடுத்த சில அம்சங்களில் ராகுல் காந்தி தொடர்ந்து விளக்கங்களை கேட்டார். இதற்கு குழுத் தலைவர் ஜுவல் ஓரம் குறுக்கிட்டு தடை விதித்தார். ராகுல் காந்தி ஒருவரே நிறைய கேள்விகள் கேட்பதால் அதிகாரிகள் அவர் ஒருவருக்கு மட்டுமே பதில் அளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக விளக்கம் அளித்தார். ராகுல் காந்தி தாமும் குழுவில் ஒரு உறுப்பினர் என்னும் முறையில் தமக்கு கேள்விகள் கேட உரிமை உளதாக பதில் கொடுத்தார்.
இதையொட்டி இருவருக்கும் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கடுமையாகவே கூட்டத்தின் நடுவில் தேநீர் இடைவேளை விடப்பட்டது. இதற்கு முன்பு டிசம்பரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான கூட்டங்களில் ராகுல் காந்தி கேட்கும் பல கேள்விகளுக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லாத நிலையில் ஜுவல் ஓரம் குறுக்கிட்டு கேள்விகளுக்கு தடை செய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்,
அப்போது அங்கிருந்த பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். ஜுவல் ஓரம் ஏற்கனவே நடந்த சில கூட்டங்களுக்கு ராகுல் காந்தி வரவில்லை என சுட்டிக் காட்டினார். அதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க முற்பட்ட போது கூட்டத்தை தேநீர் இடைவேளைக்காக ஒத்தி வைத்துள்ளார்.