புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட,தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று : புதுச்சேரி மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசை, புதுச்சேரி மாநிலத்தில் 5வது பெண் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பெடிக்கும் கடந்த 5 ஆண்டுகளாக முட்டல் மோதல் நடைபெற்று வந்தது. யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் என்பது சர்ச்சையானது. இதையடுத்து, கிரண்பேடியின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், கிரண்பேடியை மாற்ற வேண்டும் மாநில அரசு பல முறை போராட்டங்கள் நடத்தியும், மத்தியஅரசிடம் புகார் கொடுத்தும், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் தலைமையிலான சிலர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, கிரண்பேடியை மாற்ற வேண்டும என மனுக் கொடுத்தனர்.
இதையடுத்து, புதுச்சேரி துணைமாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பெடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 16ந்தேதி அன்று அறிவித்தார். அவருக்க பதிலாக தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழிசை தமிழில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், மாநில முதல்வர் நாராயணசாமி , எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு உள்பட அனைத்து கட்சியினரும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
புதிய பொறுப்பு ஆளுநர் தமிழிசை, மாநிலத்தில் 5வது பெண் துணைஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.