மும்பை: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கிரெட்டா தன்பெர்க் டிவிட்டரில் பதிவிட்ட டூல்கிட் என்ற ஆன்லைன் ஆவணத்தை பதிவு செய்த வழக்கில்,  மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு  எதிரான  விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் உலகம் முழுவதும் உள்ள சூழலியல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  விவசாயிகள்  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரெட்டா தன்பெர்க்  தனது டிவிட்டரில் டூல்கிட் என்ற ஆன்லைன் ஆவணத்தை பதிவு செய்தார். இது சர்ச்சையானதைத்தொடர்ந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இதற்கிடையில்,  அந்த டூல்கிட் பதிவை, பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவி, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப், அவரது ஆதரவாளர் சாந்தனு முலுக் போன்றோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் திஷா ரவி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளார். அதைத்தொடர்ந்து மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்யவும் டெல்லி காவல்துறையினர் வாரன்ட் பிறப்பித்தனர். இதனால், நிகிதா ஜேக்கப் தலைமறைவான நிலையில், மும்பை உயர்நீதி மன்றத்தில் தனக்கு 4 வாரங்கள் சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், நிகிதாவை 3 வாரங்கள் கைது செய்யக்கூடாது என டிரான்சிட் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.