ன்டார்டிகா

ன்டார்டிகாவில் 3000 அடி உறை பனிக்கும் கீழே உயிரினங்கள் வாழ்வதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் பனிப்பாறைகள் அடர்ந்த பிரதேசமான அன்டார்டிகாவில் எந்த உயிரினமும் வாழ முடியாது என வெகுநாட்களாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.  இதற்கு முக்கிய காரணம் எப்போதும் பனி நிறைந்திருப்பதால் உறைநிலைக்கும் குறைவான வெப்பநிலை ஆகும்.  மேலும் இங்குச் சூரிய ஒளியும் வெகுநாட்களுக்கு இருக்காது என்பதாலும் விஞ்ஞானிகள் இவ்வாறு தெரிவித்து வந்தனர்.

ஆயினும் இந்த பகுதியில் ஏதேனும் உயிரினங்கள் வாழலாம் என்னும் எண்ணம் விஞ்ஞானிகளுக்கு இருந்து வந்தது.   சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த சந்தேகம் உண்மையாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது.   சமீபத்தில் வேறு ஒரு ஆய்வுக்காக அன்டார்டிகா பகுதியில் பனிப்பாறைகளில் சுமார் 2860 அடி ஆழத்தில் துளையிடப்பட்டு உள்ளே புகைப்படக் கருவிகள் செலுத்தப்பட்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத உயிரினங்கள் வாழ்வது தெரிய வந்துள்ளது.  இந்த தகவலை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் இந்த உயிரினங்கள் உலகில் முன்பு வாழ்ந்து மறைந்து போனதாகக் கருதப்படும் உயிரினங்களாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.  மேலும் இங்குள்ள அடர்த்தியான கடல் பஞ்சு மூலம் இந்த உயிரினங்கள் வாழ்வது சாத்தியமானதாக இருக்கலாம் என கூறி உள்ளனர்.

 

இந்த பகுதி சுமார் 5,79,000 சதுர மைல் பரப்பளவைக் கொண்டதாகும்.  ஆனால் அதில் மிகச் சிறிய அளவில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  பனிப்பாறைகள் உருகுவது சமீப காலமாக அதிகரித்து வருவதால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  அதில் இந்த வியப்பூட்டும் உண்மை தெரிய வந்துள்ளது.  இந்த பனிப்பாறைகள் உடைந்து உருண்டு வரும்போது இந்த உயிரினங்கள் சிக்கி இருக்கலாம் எனவும் அவை இன்னும் உயிருடன் இருப்பது அதிசயமான ஒன்று எனவும் கூறப்படுகிறது.

கடந்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக இங்குப் பனியின் அடியில் எவ்வித உயிரினமும் வாழ வாய்ப்பில்லை எனக் கூறி வரும் வேளையில் இந்த கண்டுபிடிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.  இங்குக் காணப்படும் உயிரினங்கள் நீளமான வாலுடன் உள்ள மிருகங்களின் தோற்றத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது..  இந்த மிருகங்கள் உலகில் வாழ்ந்து வழக்கொழிந்து போன மிருகங்களாக இருக்குமோ என ஆய்வு நடத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.