சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலின் குருக்களாக பணியாற்றி வந்த , இந்திய நாட்டைச் சேர்ந்த குருக்கள் மீது நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலி. இந்த கோவிலின் தலைமைக்குருக்களாக இந்திய நாட்டவரான கந்தசாமி சேனாபதி என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படி கோவிலுக்கு சொந்த தங்க நகைகளைக் கையாடியதாகவும், நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்பட 5 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கின் விசாரணையின்போது, கோவிலின் மூலம் தனக்குக் கிடைத்த பணத்தில் $140,000க்கு மேல், கந்தசாமி சேனாபதி தன் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திக்கொண்டதாகவும் அதை, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’, ‘இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ போன்ற நிதி மையங்களின் மூலம் கந்தசாமி சேனாபதி அந்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் கோவிலுக்கு சொந்தமான நகைகள் காணாமல் போனதைப் பற்றி அறிந்ததும், ஆலய நிர்வாகத்தினர், கோயில் குருக்களான கந்தசாமி சேனாபதியை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகவும்ம், அதற்குப் பின் சிறப்பு அனுமதியுடன் கந்தசாமி சேனாபதி சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும்கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், கோயிலில் கையாடல் செய்த நகைகளை கந்தசாமி சேனாபதி மீட்டு ஆலயத்திடம் ஒப்படைத்துவிட்டதால், அவருக்கு ஜாமின் வழங்குவதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.