சேலம்: சேலத்தில் இருந்து ஐதராபாத், கோவாவுக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என திமுக எம்.பி. பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆலோசனை குழு தலைவரும், சேலம் திமுக எம்.பி-யுமான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர சர்மா, ட்ரூஜெட் ஏர்வேஸ் நிறுவன மேலாளர் பிரசன்ன குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், சேலத்தில் அதிக அளவிலான விமான சேவைகள் தொடங்கப்படுவது குறித்தும், அதற்காக சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக, விமான போக்குவரத்து துறை முதற்கட்டமாக 35 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால், விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகபடுத்தும் பணி தொடங்கப்படு உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
மேலும், சேலத்தில் இருந்து, சென்னைக்கு மேலும் ஒரு விமானம் இயக்கவும், திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்கவும் தனியார் விமான நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, கோவாவிற்கு விமானம் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.