சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசிக்கான முன்களப்பணியாளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று, 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழகத்தில இதுவரை 2.10 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 22,856 முன்களப்பணியாளர்கள், 14,186 காவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 47ஆயிரத்து 342 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்காக தமிழகம் முழுவதும 628 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இதை ஆயிரமாக அதிகரிக்க கோரி மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முதல்முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 28 நாட்கள் கழித்து இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். 28 நாள் இடைவெளி என்பதை ஒருநாள் முன்பின் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தாமதமாகும் போது, உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக காலதாமதம் ஆகும்” என்று கூறினார்.
மேலும, சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடும் வகையில், அவர்களை முன்களப் பணியாளர்களாக பதிவு செய்யுமாறு மத்தியக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.