சென்னை: ‘பீக் அவர்சில்’ இனி 5 நிமிடத்துக்கு 1 மெட்ரோ ரயில் இயக்கப்படும் என  மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட பல்வேறு சேவைகள், மத்திய மாநிலஅரசுகள் வழங்கிய தளர்வுகள் காரணமாக மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னை மெட்ரோ ரயில்சேவையும்  சுமார் 5 மாதங்களுக்கு பிறகு, கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 7ந்தேதி மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.

முதல்கட்டமாக, விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையும், இரண்டாம் கட்டமாக, பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு, புறநகர் ரயில் சேவைகள், பேருந்து சேவைகள் முழுமையாக திரும்பாத நிலையில்,  சென்னைவாசிகள் மெட்ரோ ரயிலுக்கு மாறி வருகின்றனர். இதனால், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பீக் அவர்சில் மேலும் பல ரயில்சேவைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி,  பீக் அவர் எனப்படும் வேலை நேரங்களில் இயக்கப்பட்டுவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, வார நாள்களில் (திங்கள்கிழமை முதல்  சனிக்கிழமைவரை ) உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்றுமுதல் (பிப்ரவரி 12) மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை) 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் (காலை 5.30 முதல் காலை 8 மணி வரை, காலை 10 முதல் மாலை 4 மணி வரை, இரவு 7 மணி முதல் 10 மணி வரை) 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.