டில்லி
பத்திரிகையாளர்களைத் தூக்கிலிட வேண்டும் என கோரும் யு டியூப் வீடியோவை ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் பரப்பி வருவது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது
கடந்த 11 ஆம் தேதி அன்று யூ டியூபில் ஒரு வீடியோ வெளியானது. இதை தி ஸ்டிரிங் என்னும் பெயருள்ள கணக்கு தாரர் பதிந்துள்ளார். இந்த பதிவர் கலாச்சார மேம்பாடு மற்றும் ஆன்மீக குரல்களை மக்களிடையே மேம்படுத்த விரும்புவோரை இணைக்க தமது கணக்கை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ராத்தி, சுபைர் மற்றும் பர்க்காவை கைது செய் என்னும் தலைப்பில் வெளியானது.
இந்த வீடியோவில் இடது சாரி பத்திரிகையாளர்கள் மீது கண்டனம் எழுப்பட்டிருந்தடு. இந்த வீடியோவில் பர்க்கா தத், முகமது சுபைர், சாகேத் கோகலே, நியூஸ்லாண்டரி, ஸ்க்ரோல், ஆல்ட் நியூஸ், தி ஒயர், தி குவிண்ட், தி நியூஸ் மினிட் இந்தியா ஸ்பெண்ட், அவுட்லுக் இந்தியா மற்றும் பாரி ஆகிய ஊடகங்கள் மீது கடும் குற்றச்சாட்டு காணப்பட்டது. மேலும் இந்த பத்திரிகையாளையர்களை ஏன் தூக்கிலிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
மக்களின் எதிர்ப்புகளால் இந்த வீடியோவை யு டியூப் நீக்கியது. இந்த வீடியோவை வெளியிட்ட ‘தி ஸ்டிரிங்’ இது குறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துரை இயக்ககம், தேசிய புலனாய்வு அமைப்பு, மேலும் ரிபப்ளிக், ஸ்வராஜ்யா உள்ளிடட பத்திரிகைகளை டாக் செய்துள்ளது. மேலும் தனது உயிருக்கு அபாயம் உள்ளதால் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வீடியோ நீக்கத்துக்கு டில்லி சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மிஸ்ரா, தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்ஜி சூர்யா ஆகியோர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக யூ டியூப் நிர்வாகத்தை அவர்கள் கண்டித்து டிவிட்டரில் பதிந்துள்ளனர். இந்த டிவீட்டுகள் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இது டிவிட்டர் விதிகளுக்கு மாறானது எனத் தெரிந்தும் இதைப் பலரும் பதிந்து வருகின்றனர்.
மும்பை பாஜக செய்தி தொடர்பாளரான சுரேஷ் நகுவானா இந்த வீடியோ நீக்கப்பட்டதைக் கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டிவீட்ல் 1450 முறை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 தேர்தலில் சமூக ஊடகங்கள் மூலம் பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஆர் எஸ் எஸ் தொண்டர் விகாஸ் பாண்டே ‘தி ஸ்டிரிங்’ குக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவர்களைப் போல் முன்னாள் சிவசேனா உறுப்பினரும் தம்மைப் பெருமைக்குரிய இந்து தேசியவாதி என சொல்லிக்கொள்பவருமான ரமேஷ் சோலன்கி இந்த வீடியோக்கள் உண்மைகளை வெளிப்படுத்துவதாக டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். இவரைத் தொடர்ந்து நுபுர் சர்மா, சக்கிராந்த் சானு உள்ளிட்ட பல இந்து ஆர்வலர்கள் ’தி ஸ்டிரிங்’ மாபெரும் பணி புரிவதாக புகழ்ந்துள்ளனர்.
இவர்கள் இவ்வாறு இந்த வீடியோவை பரப்பி வரும் வேளையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக வலைத் தளங்கள் தவறான மற்றும் வன்முறையைத் தூண்டும் செய்திகள் வெளியி9ட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் பல ஆர்வலர்கள் மீது பாஜகவினர் சமூக வலைத் தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.