புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ‘கிஸான் மகாபஞ்சாயத்’ கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்துகொண்டது, மேற்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளித்துள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷரன்பூரில், பிப்ரவரி 10ம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் கிஸான் மகாபஞ்சாயத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அது, போராடும் விவசாயிகளின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

இக்கூட்டத்தில் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்துசெய்யப்படும்” என்றார். இது, விவசாயிகளிடையே பெருத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

பிரியங்கா காந்தி, 10 நாட்கள் ‘ஜெய் ஜவான்-ஜெய் கிஸான்’ என்ற பெயரிலான இயக்கத்தை, விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், உத்திரப்பிரதேசத்தில் துவக்கியுள்ளார். இந்த செயல்திட்டத்தின் மூலம், மேற்கு உத்திரப்பிரதேச பிராந்தியத்தின் காங்கிரஸ் கட்சியில் உத்வேகம் ஏற்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.