மும்பை: மாநில ஆளுநருக்கு மராட்டிய அரசின் விமான சேவை கிடைக்காதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, மராட்டிய ஆளுநர் மாளிகையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.

மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்திரகாண்ட் மாநிலத்திற்கு செல்கையில், அவருக்கு மாநில அரசுக்கு சொந்தமான விமான சேவை வழங்க மறுக்கப்பட்டது. இதனால், அவர் வர்த்தக விமானத்தில் செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.

அவர் கூறியுள்ளதாவது, “ஆளுநரின் பயணத்திற்கு மாநில அரசின் விமானத்தை வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று, ஆளுநர் மாளிகை செயலகத்திடம், மாநில அரசின் சார்பில் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

எனவே, ஆளுநர் புறப்படுவதற்கு முன்னதாக, ராஜ்பவன் செயலகம் இதுகுறித்து மாநில அரசிடம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இதில் முழு தவறும் அவர்களுடையதுதான். இந்த விஷயத்தில் மாநில அரசை குறைகூறுவதற்கு எதுவுமில்லை” என்றுள்ளார் அவர்.