புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள், தங்களது கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான விவரங்கள் குறித்து,  தினசரி ஆன்லைனில் பதிவேற்ற  வேண்டும் என புதுவை கலால்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் மாநிலஅரசுக்கும், துணை ஆளுநருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வரும்சூழலில், அரசு அதிகாரிகளைக்கொண்டு கிரண்பேடி பல்வேறு அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது, கலால்துறைமூலம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி, புதுவை கலால் துணை ஆணையர் சுதாகர், மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானம் விற்பனை கடைகளுக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர்   வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, அனைத்து மதுபான கடை உரிமதாரர்களும் கலால் விதிப்படி செயல்பட வேண்டும்.

அனைத்து சாராய கடைகள், மதுபான விற்பனையகங்கள் மற்றும் குடோன்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் முழுமையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

குடோன்களில் உள்ள கேமிராக்கள் அனைத்தும் நேரடி முறையில் பார்க்கும் வகையில் கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.

அதுதொடர்பான முழு விவரத்தை வருகிற 20-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும்.

இது, வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.