குவைத்

ழமை வாதிகள் அதிகம் உள்ள குவைத்தில் பெண்களின் பாலியல் தொல்லையை வெளியே கூறும் #மீடூ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அரேபிய நாடுகளில் பழமையை மிகவும் விரும்பும் நகராக குவைத் உள்ளது.   இங்குப் பெண்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படுகின்றனர்.  பெண்களின் உடைகள், பேச்சுக்கள் போன்ற அடிப்படை உரிமைகளுக்கும் இங்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  எனவே இங்கு ஏதேனும் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கபட்டல் அதை வெளியில் சொல்வது அவமானமான விவகாரம் எனப் பெண்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குவைத் பெண்கள் #மீடூ என்னும் பாலியல் சீண்டல் குறித்த விவகாரங்களை வெளியிடும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர்.  இதைக் கடந்த வாரம் குவைத்தின் பிரபல ஃபேஷன் டிசைனரான அஸ்சியா அல் ஃபராஜ் தனது சமுக வலைத் தளத்தில் பதிந்துள்ளார்.  இவருக்கு இவருடைய தளத்தில் 25 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

இந்த பதிவில் அவர், “நான் ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் போதும் தெருக்களில் எனக்குத் தொல்லை அளிக்கப்படுவதையோ அல்லது வேறொரு பெண்ணுக்குத் தொல்லை அளிக்கப்படுவதையோ காண முடிகிறது.   சமீபத்தில் நான் நடந்து வரும் போது வேகமாக வந்த கார் என்னைப் பயமுறுத்தி விட்டுச் சென்றது.  இதுவும் ஒரு வகை தொல்லை தான்.  ஒரு பெண்ணுக்கு இவ்வாறு நடந்து அவள் கீழே விழுவதைக் கண்டு ரசிக்க யாருக்கும் அவமானம் இல்லை” என வீடியோ காட்சியில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் குவைத் நகரைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுக்கு நேரிடும் பாலியல் சீண்டல் உள்ளிட்ட  பல தொல்லைகள் குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.   இது குறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பல ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பல பெண்கள் தங்களுக்கும் பல சீண்டல்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  மேலும் இவ்வாறான நிகழ்வுகள் இனியும் நிகழாமல் தடுக்க பல கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் வெளிநாட்டில் கல்வி கற்று வந்த ஷியாமா ஷமோ என்னும் 27 வயதான மருத்துவர் திரும்பி வந்துள்ளார். அ வர் ஃபராஜின் வீடியோவை பார்த்த பிறகு “லான் ஆஸ்கெட்” என்னும் இணைய தள மேடையை உருவாக்கி உள்ளார்.  இது குறித்து அவர், “இந்த மேடையை உருவாக்கிய உடனேயே பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிரத் தொடங்கி உள்ளனர்.   பலர் திட்டுகள், அடி உதை மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஃபராஜ் மற்றொரு வீடியோவில், “வெளிநாட்டில் இருந்து குவத்துக்குப் பணி புரிய வரும் இந்தியர், பாகிஸ்தானி மற்றும் பிலிப்பைன்ஸ் பெண்கள் குவைத் பெண்களை விட அதிக அளவில் பாலியல் தொல்லை அனுபவிக்கின்றனர்.” என தெரிவித்துள்ளார்.   இந்த இயக்கத்துக்கு பெரும் ஆதரவு ஒரு புறம் இருந்தாலும் பழமை வாதிகளின் எதிர்ப்பும் அதிக அளவில் உள்ளது.  அவர்கள் பெண்களின் உடைகளால் தான் அவர்களுக்கு பாலியல் தொல்லைகள் நிகழ்வதாகக் கூறுகின்றனர்..