டெல்லி: டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும், கலவரத்தை தூண்டியதாகவும், காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உள்பட 7 பேரை மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையிலான ஒரு பிரிவினர், காவல்துறையினரின் தடுப்பை மீறி, அவர்களை தாக்கிவிட்டு, செங்கோட்டைக்குள் புகுந்தனர். வன்முறையை தடுக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த வன்முறையின்போது, விவசாயி ஒருவர் உயிரிழந்திருந்தார். அவரது மரணம் சர்ச்சையானது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்ட சசிதரூர், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்தான்அந்த விவசாயி உயிரிழந்தார் என தெரிவித்திருந்தார். மேலும் பலர் காவல்துறையினரின் துப்பக்கிச் சூடு குறித்து விமர்சித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, டெல்லி நொய்டா காவல்துறை, சசிதரூர், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட 7பேர் மீது வழக்கு பதிவு செய்தது. அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இதை எதிர்த்து, சசிதரூர் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிதரூர் உள்பட 7 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மீண்டும் வழக்கு இரண்டுவார காலத்திற்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.