டெல்லி: ஜனவரி 26ந்தேதி அன்று காவல்துறையின் உத்தரவை மீறி, டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் டிராக்டர் பேரணி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பஞ்சாபி நடிகர் தீப்சித்து கைது செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி காவல்துறை அறிவித்து உள்ளது. இவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட டெல்லி சிறப்பு காவல்துறை தீப் சித்துவை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 75வது நாளை எட்டியுள்ளத. முன்னதாக, குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, காவல்துறை தடுப்புகளை மீறி, சில பகுதிகளில் விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது வன்முறை தாண்டவமாடியது. ஏராளமான காவல்துறையினர் தாக்கப்பட்டனர்.
இந்த பேரணியின்போது, பஞ்சாபி நடிகர் தீப் சித்துவும் கலந்து கொண்டார். அவர் தலைமையில் சென்ற பேரணியினர், காவலர்களை தாக்கிவிட்டு, செங்கோட்டைக்குள் நுழைந்து, சீக்கிய மதக் கொடிகளையும், பிற கொடிகளையும் ஏற்றினர். இந்த சம்பவங்கள் நடந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
நடிகர் தீப் சித்து, செங்கோட்டையில் மதக் கொடியை ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேரை கைது செய்வதற்கு துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் என்றும், ஜாஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.