சென்னை: ரஜினியின் அரசியல் அறிவிப்பால் ஏமாந்து போன முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் வரும் வியாழக்கிழமை (11ந்தேதி) பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக செய்தி வெளியாக உள்ளது.
சென்னையின் மாநகராட்சியின் முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன், ரஜினியின் சிறந்த நண்பராக இருந்து வருகிறார். இவர் ரஜினி தொடங்கப்போகும் அரசியல் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்து, அவருக்காக பணியாற்றி வந்தார். ஆனால், ரஜினி அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப்பான நிலையில், தங்களது அரசியல் வாழ்க்கை புஷ்வானமாகி விட்ட கனவில், ரஜினிக்காக குரல் கொடுத்தவர்கள் மாற்றுக்கட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த கராத்தே தியாகராஜனும் வேறு வழியின்றி பாஜகவில் ஐக்கியமாகிறார். இவர், வரும் வியாழக்கிழமை (11.02.21) அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக மேலிட துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கராத்தே தியாகராஜன், அதிமுகவில் இருந்த போது 2002 முதல் 2005 வரை இவர், சென்னை மாநகராட்சி பொறுப்பு மேயராக பதவி வகித்தார். அதன்பின் 2005 ல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர், கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, ரஜினிக்காக ஆதரவு தெரிவித்து வந்தார். ரஜினி கட்சியில் முக்கிய நிர்வாகியாக இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவில் சேர முடிவு செய்துள்ளார்.