டெல்லி: பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும்  என  டிவிட்டர் நிர்வாகத்துக்கு  மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் 74வது நாளாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் குதித்துள்ள  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். உலக நாடுகளின் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், போராடும் விவசாயிகள் கூட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 26ந்தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டிவிட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு ஏற்கனவே  டிவிட்டர் நிர்வாகத்துக்கு கூறியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால்,  ஆனால்  டுவிட்டர் நிறுவனம் இதுவரை அந்த கணக்குகளை நீக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 3 மணி நேரம் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடத்தினர். டெல்லி எல்லை களில் அக்டோபர் 2ம் தேதி வரை போராட்டம் நீடிக்கும் என்று  அறிவித்து உள்ளனர்.  இதையடுத்து, மத்தியஅரசு  தற்போது மீண்டும் டிவிட்டர் நிர்வாகத்துக்கு, 1,178 காலிஸ்தான் ஆதரவாளர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்குமாறு  உத்தரவிட்டு உள்ளது.