திருமலை:
மிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட, எம்எல்ஏ குமரகுரு 4 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.3.16 கோடியை நேற்று நன்கொடையாக வழங்கி உள்ளார்.

உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு, திருமலையில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியை நேற்று காலை சந்தித்தார். அப்போது, அவரிடம் உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ரூ.20 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலப்பட்டா, ரூ. 3.16 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறும்போது, “இந்து சனாதன தர்மத்தை பரப்பும் வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில்களை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் காஷ்மீரில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது குமரகுரு வழங்கிய இடத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்” என்றார்.

ஏழுமலையான் கோயிலில்தற்போது இலவச தரிசன டோக்கன் மட்டுமே தினமும் 20 ஆயிரம்வழங்கப்படுகிறது. இதுதவிர, ரூ.300 ஆன்லைன் டிக்கெட்கள், விஐபி பிரேக் தரிசனம், ஆந்திர சுற்றுலாத் துறை சார்பில் வருபவர்கள் என தினமும் தற்போது 50 ஆயிரம் பேர் வரை சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை என்பதால் தர்ம தரிசனம் டோக்கன் வழங்கும் மையங்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.