சென்னை: சிறை தண்டனை முடிவடைந்து விடுதலையாகி உள்ள சசிகலா,  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காரில் வரும் 8ந்தேதி தமிழகம்  வருகை தருகிறார். அவரது வருகையை பிரமாண்டமாக நடத்த அமமுகவினரும், அவரது ஆதரவாளர்களும்  ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த காவல்துறையினரிடன அமமுகவினர் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்தே, சசிகலா பேரணிக்கு அனுமதி வழங்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். தற்போது அவர்  பெங்களூரு புறநகர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருவதுடன், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து  வரும் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அவர் சென்னை வரவுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவருடன் ஆயிரக்கணக்கான கார்களுடன், பிரமாண்டமாக வரவேற்க அமமுகவினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக தமிழகம் முழுவதும் வாடகை கார்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலை முழுவதும் பேனர்கள் வைக்க அந்தந்த பகுதி அமமுகவினர் அரசிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சசிகலா தலைமையில் சென்னையில் பேரணி நடத்த அமமுக சார்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே டிடிவி தினகரன்,  ஜெயலலிதாவின் காரில், அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் செய்ததற்கு எதிராக எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும்போது,   டிஜிபியிடம் அல்ல முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என தெரிவித்ததுன,  மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். (2 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை பெற்றவர்கள் விடுதலையான நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது)  மேலும், பல அதிமுகவினரே சசிகலாவை  வரவேற்று  போஸ்டர், பேனர்கள் வைத்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். தலைமையில்  அதிமுக தலைமையகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்  அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலை, அவரது தமிழக பயணம், அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது போன்றவை குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், சென்னையில் சசிகலா பேரணி நடத்தினால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, சசிகலாவின் சென்னை பேரணிக்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பான காவல்துறையின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சசிகலாவின் வருகையின்போது, அவர் ஜெ.சமாதிக்கு செல்வதை தடுக்கும் வகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது பேரணிக்கு தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.