டெல்லி: விவசாயிகளின் போராட்டம் 73வது நாளாக தொடர்கிறது. இது தொடர்பான விவாதத்தில் பதில் அளித்துபேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர், வேளாண் சட்டத்தில் தவறாக ஏதும் இல்லை, விவசாயிகள் போராடத் தூண்டப்படுகிறார்கள், இருந்தாலும் சில மாற்றங்கள் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது, அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும், ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல் மற்றும் ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது ஆகிய 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் 73வது நாளாக தொடர்கிறது. தற்போது, விவசாயிகளின் போராட்டம், சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பல சர்வதேச பிரபலங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. இதற்குபதில் அளித்து பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதற்காக இந்த சட்டம் தவறானது என்று யாரும் கருதி விட வேண்டாம். விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டும் தான் இந்த சட்டத்தை குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தான் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது. ரத்தத்தால் விவசாயம் நடத்த காங்கிரசால் மட்டுமே முடியும் .
இவ்வாறு அவர் கூறினார்.