சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இன்று கடைசிநாள் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.  கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம், பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளுக்க தண்டனை அதிகரிப்பு உள்பட சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு பதில் தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்  என்று அறிவித்துள்ளவர், காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து திரும்பப் பெறப்படும் என அறிவித்து உள்ளார்.

தேர்தலை முன்னிட்டு, விவசாய கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர், தற்போது ஜல்லிக்கட்டு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார்.