டில்லி
கடந்த செப்டம்பர் மாதம் 6 அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை கொரோனா காலத்தையொட்டி இந்தியா குறைத்துள்ளது.

அரபு நாடுகளில் சுமார் 2.30 கோடிக்கும் மேல் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியராக உள்ளனர். இதே நிலை ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ளன. இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தை அந்தந்த நாடுகளின் நாடுகளுக்கு ஏற்ப இந்திய அரசு நிர்ணயிக்கிறது. இந்த தொழிலாளர்கள் அந்நாடுகளில் உயர் மாடிக் கட்டிடங்கள், விடுதிகள் சுத்தம் செய்தல், குளிர் சாதன பணிகள், உணவு பரிமாறுதல், வயதானோர் அல்லது முதியோர் அல்லது குழந்தைகளை கவனிக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர்,.
இந்த தொழிலாளர்களுக்கு அரபு அமீரகத்தில் குறைந்த பட்ச ஊதியமாக 1200 திர்ஹாம்கள் அதாவது ரூ.23885 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் ரூ.33,134 மற்றும் குவத்தில் ரூ. 24131, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் பணிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு தொழிலாளருக்கும் வேறு வேறு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பொதுவாக ஊதியம் இதை விட அதிகமாகவே அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பால் பலர் பணி இழந்து நாடு திரும்பினர். இந்நிலையில் இந்திய அரசு அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.14,875 ஆக அதாவது $200 ஆகக் குறைத்துள்ளது. இது பல நாடுகளிலும் அந்த நாடுகளில் அளிக்கப்பட்டு வரும் குறைந்த பட்ச ஊதியத்தை விடக் குறைவாக உள்ளது. குறிப்பாக கத்தார் நாட்டில் குறைந்த பட்ச ஊதியம் $275 ஆக உள்ள நிலையில் இந்தியா அதை $200 ஆகக் குறைத்துள்ளது.
தற்போதைய நிலையில் மீண்டும் அரபு நாடுகளுக்கு இந்தியர்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவ்வாறு செல்வோருக்கு முன்பு கிடைத்ததை விடக் குறைவான ஊதியமே அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புக்கள் கிடைக்க இவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லி வருகிறது. ஆனால் இதனால் ஏற்கனவே பணி புரிந்தோருக்கு தற்போது கடுமையான ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.