புதுடெல்லி: மேற்கு உத்திரப்பிரதேசத்தில், கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு பெரியளவில் ஆதரவளித்த ஜாட் இனத்தினர், வேளாண் சட்டங்களின் காரணமாக, அந்தக் கட்சிக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.

பாஜகவிற்கு கடந்த தேர்தலில் வாக்களித்ததற்கு தாங்கள் வருந்துவதாய் அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கு உத்திரப் பிரதேசத்தின் காசிபூர் எல்லையில் தற்போது, வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இவர்களில் பெரும்பாலானோர் ஜாட் இனத்தவர். கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையால், காசிபூரில் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்தது.

ஆனால், விவசாயிகளின் தலைவர் ராகேஷ் டிகெய்ட், போராட்டத்தின்போது, கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசிய வீடியோவைப் பார்த்தபிறகு, காசிபூர் எல்லையில் விவசாயிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.

இந்த நிலவுடைமை ஜாட் விவசாயிகள், ஆளும் பாஜகவினரைவிட, தாங்கள் தேசபக்தி மிகுந்தவர்கள் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் தாங்கள் நம்பி வாக்களித்த பாஜக, தங்களை பெரிதாக ஏமாற்றிவிட்டதாகவும், தாங்கள் அத்தவறை திரும்பவும் செய்யமாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.