சென்னை: ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் பன்வாரிலால், மக்களை ஏமாற்றி கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர். இது ஆளுநரின் இன்றைய அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர். இது குறித்து பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். குற்றவாளிகள் 7 பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடி வருவதால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதற்கிடையில், தமிழகஅரசும் 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியும், ஆளுநர் இதுவரை முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதைத்தொடர்ந்து, பேரறிவாளன் தரப்பில், உச்சநீதிமன்றத்தில், ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாகத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது. மேலும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒரு வார காலத்துக்குள் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று கால எல்லையும் விதித்திருந்தது. விசாரணையின்போது, மத்திய அரசும் நான்கு நாட்களில் கவர்னர் முடிவு அறிவிப்பார் என தெரிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர் களிடையே பேசிய அமைச்சர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுவிப்பு விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புவதாக கூறி இருந்தனர்.
உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு, ஜனவரி 29ந்தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், ஆளுநர் எந்தவொரு அறிவிப்பும் வெளியாமல் காலம் தாழ்த்திய நிலையில், இன்று மாலை, 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட முடியும் என்றால், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 30ந்தேதி அன்று ஆளுநரை சந்தித்த தமிழக முதலமைச்சர், 7 பேர் விடுதலை தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கடிதத்தின் மூலம் வலியுறுத்தினார். அதை இன்று சட்டமன்றத்திலும் முதல்வர் தெரிவித்தார்.
இந்த நிலையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என கவர்னர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த முடிவை சுப்ரீம் கோர்ட்டிலும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், 7 பேர் விடுதலை விவகாரத்தில் இன்று கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளை பார்க்கும்போது, இந்த விஷயத்தில், ஆளுநரும், தமிழகஅரசும் தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் கண்ணாமூச்சி ஆடி வருவது தெரிய உள்ளது.
இந்த விவகாரத்தில் ஜனவரி 30ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னரை சந்தித்த நிலையில், அவருக்கு இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட வில்லையா? அல்லது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என கூறி மக்களை ஏமாற்றினாரா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், ஆளுநர் அறிக்கையில், கடந்த ஜனவரி 25ந்தேதி அபிடவிட் தயார் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக மத்தியஅரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில், 25-01-2021 என குறிப்பிடப்பட்டு இருப்பதும், அதன் நகல் இன்றைய தேதியில் வெளியாகி உள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று நேரடியாக அறிவிக்காமல், அவர்களின் சிறை வாழ்க்கையை வைத்து, அரசியல் ஆதாயம் தேடும் அதிமுக மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் அம்பலமாகி உள்ளது.