மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு, ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறைக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு ஆதரவாக ரஷ்யாவில் போராட்டம் வெடித்துள்ளது.

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னிக்கு தற்போது 44 வயது. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி வருகிறார். பதிலுக்கு, அலெக்சி நாவல்னி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, புடின் அரசு சுமத்தி வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டில், நாவல்னி மீதான ஒரு வழக்கில், அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர், ஓராண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அதன்பின், அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், வெளிநாடு செல்லக்கூடாது என்ற உத்தரவுடன், நாவல்னிக்கு பரோல் வழங்கியது.

கடந்த ஆண்டு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலெக்சி நாவல்னி, திடீரென மயங்கி விழுந்தார். அவரது உடம்பில், மிகக்கொடிய விஷம் செலுத்தப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள மருந்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஐந்து மாதங்கள் சிகிச்சை முடிந்து சமீபத்தில் ரஷ்யா திரும்பியபோது, அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, நாவல்னியை விடுதலை செய்யக்கோரி, ரஷ்யா முழுவதும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள், சாலையில் போராட்டத்தில் குதித்தனர். வரலாறு காணாத வகையில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அலெக்சி நாவல்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அவர் மீறியதால், ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையில், 2.5 ஆண்டு காலத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ரஷ்யாவில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.