டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள், குடியரசு நாளில் டெல்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது, பேரணிக்கு அனுமதிக்கப்படாத இடத்தில் அவர்கள் பேரணி செல்ல, அப்போது நடந்த வன்முறையால் பொது சொத்துகள் சேதமடைந்தன. வன்முறை தொடர்பாக, 123 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், செங்கோட்டையில் அனுமதிக்கப்படாத பகுதிகளை நோக்கி விவசாயிகளை திருப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள பஞ்சாப் நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளிய 14 டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் 80க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
தேடப்பட்டு வரும் நடிகர் தீப் சித்து, செங்கோட்டையில் கொடி ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது. இவர்கள் தவிர ஜாஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.