சென்னை: சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய மேலும் 3 நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து நீக்கி இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிககை எடுத்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெஙறறு, பெங்களூரு – பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது சிறை வாழ்க்கை முடிவடைந்து, ஜனவரி மாதம் 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
சசிகலா விடுதலையை வரவேற்று பல அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியும், பேனர் வைத்தும் வரவேற்றனர். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சசிகலாவை வரவேற்ற நிர்வாகிகளை கட்சி தலைமை களையெடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் 3 நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ளது அறிக்கையில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
தேனி மாவட்டத்தை சார்ந்த பண்ணை சின்னராஜா (ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர்) , திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தை சார்ந்த அரசங்குடி சாமிநாதன் (திருவெறும்பூர் கிழக்கு ஒன்றியம்)( மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத்தலைவர்) , மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த குத்புதின் (செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி இரா.அண்ணாதுரை மற்றும் திருநெல்வேலி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா ஆகிய இருவரையும் அதிமுக கட்சியிலிருந்து நீக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.