சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எதற்காக வெளிநடப்பு செய்தோம் என்று செய்தியாளர்களிடம் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால்,  ஆளுநர் உரைக்கு  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆளுநருடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர்.  அதையடுத்து,  திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளது. அதுகுறித்து ஆளுநரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், ஆளுநர் எங்கள் புகார் மீது இதுவரை முடிவெடுக்காததால் அவரது உரையை புறக்கணிக்கிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளுநரின் செயல்பாடு, ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதல்வர், அமைச்சர்களுக்கு துணை நிற்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டிய மு,க,ஸ்டாலின்,   இந்த கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மீதான ஊழல், எழுவர் விடுதலை, மக்களின் பிரச்னைகள் குறித்து பேச சட்டப்பேரவையில் எந்த வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. ஏற்கனவே மக்கள் மன்றத்தில் இதை பேசிவிட்டோம்.

ஆளும் அரசின் கடைசி பட்ஜெட் இது அமைதியாக இருங்கள் என்று ஆளுநர் கூறினார். அது உள்ளபடியே உண்மை. ஆளும் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் இதுதான்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.