பாட்னா: ஐக்கிய ஜனதாதள எதிர்ப்பினால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து, எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பின்வாங்க நேர்ந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இதற்கு அனைத்துக் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில், நிதிஷ் கட்சியை காலிசெய்வதற்காக, பாஜகவின் தூண்டுதலின் பேரில், கூட்டணியிலிருந்து விலகி, நிதிஷ் கட்சி நிற்கும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தினார் சிராக் பஸ்வான் என்று வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்னும் வகையிலேயே, இதுவரை அனைத்தும் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு, சிராக் பஸ்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ‍அதைக் கடுமையாக எதிர்த்த ஐக்கிய ஜனதாதளம், அவர் கலந்துகொண்டால், நாங்கள் கூட்டத்தைப் புறக்கணிப்போம் என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், சிராக் பஸ்வான் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென, பாஜக தரப்பில் அவருக்கு மறைமுக வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்த சிராக் பஸ்வான், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டதாக காரணம் தெரிவித்துள்ளார்.