மதுரை: காமராஜர் பல்கலைக் கழகத்தில் சட்டவிரோத பணி நியமனம் தொடர்பாக விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கையில், யார்- யாருக்கு எதிராக குறிப்புகள் இடம் பெற்றுள்ளவோ, அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயலாளர் லயோனல் அந்தோணிராஜ், இதுதொடர்பாக பொதுநல மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, சட்டவிரோதமாக பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்/பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பதவி உயர்வு அளிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வானது, “உயர்நிலைக்குழு அறிக்கையில் யார், யாருக்கு எதிராக குறிப்புகள் இடம் பெற்றுள்ளனவோ, அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கக்கூடாது என்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், கவர்னரின் செயலாளர், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, பிப்ரவரி மாதம் 12ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என்றனர் நீதிபதிகள்.