டில்லி

ரும் பிப்ரவரி 1 முதல் திரையரங்குகளில் 100% பேரை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு அரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மார்ச் இறுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன.  இதனால் திரையரங்கு ஊழியர்கள், உரிமையாளர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.  அத்துடன் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் போன்றோரும் பாதிக்கப்பட்டனர்.  இந்நிலையில் அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்தது.

ஆயினும் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.  பலரின் வேண்டுகோளுக்கிணங்க நவம்பர் 10 முதல் பல வழிகாட்டு நெறிமுறைகளுடன் 50% பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்னும் உத்தரவுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது.   ஆயினும் போதிய மக்கள் வருகை இல்லாததால் பல் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகியது.  அதையொட்டி தமிழக அரசு 100% இருக்கைகளை நிரப்பலாம் என அனுமதி வழங்கியது.  ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.  ஆகவே இந்த அனுமதியை திரும்பப் பெற்ற தமிழக அரசு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது.

இந்நிலையில் மத்திய அரசு மல்டிபிளக்ஸ் மற்றும் தனி திரையரங்குகளில் பிப்ரவரி 1 முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.  இதனால் தமிழக அரசும் 100% இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கும் என கூறப்படுகிறது.  திரையரங்க உரிமையாளர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.