சென்னை: மக்கள் சேவையாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையுடன் தாய்க்கு நிகரான பரிவுடனும், மனிதநேயத்துடனும் மகத்தான சேவையாற்றி வருபவர்கள் செவிலியர்கள்.
கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமலும், தங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்காமலும் மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை ஈடுபத்திக் கொண்டவர்கள் செவிலியர்கள். கொரோனா பேரிடர் காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
அவர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர் கேட்பது பிச்சை அல்ல, அவர்களின் உரிமை. செவிலியர்களுடைய பிரச்னையைக் கனிவோடு பரிசிலனை செய்து தீர்வு காண வேண்டும்.
பெருகி வரும் விலைவாசி உயர்வு, குடும்பத்தில் வறுமை என்று பெரும்பான்மையான செவிலியர்கள் பாதி வயது கடந்தவர்களாக வாழ்வோடு போராடி கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வை முறையாக வழங்க ஆணையிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.