வாஷிங்டன்
எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி அளித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் பாரக் ஒபாமா நிர்வாகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணி புரிவோரின் வாழ்க்கைத் துணை மற்றும் ஆதரவில் உள்ளோர் அமெரிக்காவில் பணி புரிய அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது அந்த விதிமுறைகளை அவர் மாற்றி அமைத்தார்.
அதன்படி எச்1பி விசா பெற்றுப் பணி புரிவோரின் குடும்பத்தினர் பணி புரிய எச்4 பணி உரிமம் பெற வேண்டும் எனச் சட்டம் இயற்றினார். அமெரிக்கர்கள் பணி புரியும் உரிமையை வெளிநாட்டவர் பறிப்பதைத் தடுக்கவே இவ்வாறு செய்ததாக டிரம்ப் காரணம் கூறினார்.
இதனால் பல வெளிநாட்டினர் குடும்பங்களைச் சேர்ந்தோர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் வருடம் தோறும் எச்4 பணி உரிமம் பெற விண்ணப்பித்து காத்திருந்தனர்.
ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்தது. குறிப்பாகச் சென்ற வருடம் மட்டும் 67,690 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 52740 பேருடைய விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் புதிய அதிபராகப் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் எச்1பி விசா வைத்திருப்போரின் குடும்பத்தினர் அமெரிக்காவில் பணி புரிய அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவர்கள் எச்4 பணி உரிமம் பெறவும் தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சுமார் 1 லட்சம் இந்தியர் உள்ளிட்ட பலரும் பயனடைவார்கள்.