புவனேஸ்வர்: ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான முன்கள பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிக நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 2வது மாநிலமாக ஒடிசா உள்ளது. மேலும், மாநிலத்தில் 1,77,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் பிஜய் பனிகிராஹி கூறியதாவது:  மத்திய அரசு ஒடிசாவிற்கு வழங்கப்பட்ட 3 லட்சம் தடுப்பூசிகளில் 1,77,000 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. மீதமுள்ள 1,73,000 தடுப்பூசிகளை வரும் 10ம் தேதிக்குள் செலுத்தப்பட்டுவிடும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 2 பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அதே சமயம், சம்பால்பூரில் 27 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். அவர் ஜனவரி 23ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் ஆவார். ஆனால் அவரது மரணம் ஊசி செலுத்தி கொண்டதால் ஏற்பட்டதா என்பது இன்னமும் கண்டறியப்பட வில்லை என்று கூறினார்.