நியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான நோயெதிர்ப்பு திறனை உருவாக்காத காரணத்தால், தனது தடுப்பு மருந்து திட்டத்தை நிறுத்தியுள்ளது அமெரிக்க நிறுவனமான மெர்க் & கோ.
அமெரிக்காவின் மருந்துகள் தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனமாகும் இது. கடந்த காலங்களில், வெற்றிகரமான பல தடுப்பு மருந்துகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
Pfizer Inc., Moderna Inc. and Johnson & Johnson போன்ற நிறுவனங்களின் தடுப்பு மருந்து உருவாக்க செயல்பாடுகளிலிருந்து மாறுபட்ட தனது முயற்சிகளை மேற்கொண்டது மெர்க் & கோ. அதாவது, பலம் குன்றிய வைரஸுக்கு எதிராக, பாரம்பரிய முறையில் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டது அந்நிறுவனம்.
V590 மற்றும் V591 என்ற பெயரில், அந்நிறுவனம் தடுப்பு மருந்துகளை தயாரித்தது. ஆனால், அம்மருந்துகள், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றும், முடிவுகள் ஏமாற்றத்தை அளித்தன என்றும் தகவல்கள் தெரிவித்தன.
அதாவது, இரண்டு கட்ட டோஸ்கள் அளிக்கப்பட்ட பிறகும், அம்மருந்துகள் தேவையான ஆன்டிபாடிக்களை உற்பத்தி செய்யவில்லை. அதாவது, தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் மருந்துகள் அளவிற்கு பயன்தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்நிறுவனம், தனது தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.